ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்....’ நூலுக்கு மறுப்பு தெரிவித்து, சென்னை (ஜூன் 4) வெளியீட்டு விழாவில் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் தொகுப்பு. 

ராஜீவ் சர்மாவின் ‘புலிகளுக்கு அப்பால்’ என்ற இந்த நூல், உளவுத் துறையின் குரலை அப்படியே பிரதிபலிக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது உளவுத் துறை பரப்பிய ‘அவதூறு’ பழிகளை அப்படியே நியாயப்படுத்துகிறது. அதே நேரத்தில், உளவுத் துறை மீது எந்த ஒரு ‘தூசும்’ விழாமல் நியாயப்படுத்துவதிலிருந்தே, இந்த நூலின் பின்னணியை புரிந்து கொள்ள முடியும். 

ஈழத் தமிழர் பிரச்சினையில் குழப்பங்கள், படுகொலைகளை உருவாக்கி திட்டமிட்டு, அரங்கேற்றிய சதிக் கும்பலே, உளவு நிறுவனங்கள்தான் என்ற உண்மையை முற்றாக ஒதுக்கிவிட்டு, உளவுத் துறையின் ஒலி குழலாகவே ஒலிக்கிறது இந்த நூல். 

1983 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவில் போராளிகளுக்குப் பயிற்சி தந்த காலத்திலிருந்தே ‘ரா’ உளவு நிறுவனங்களின் பிரித்தாளும் சூழ்ச்சிகள் தொடங்கி விட்டன. இந்திய உளவு நிறுவனத்தோடு நெருக்கமாக இருந்தவரும், உளவு நிறுவனங்கள் போற்றிப் பாராட்டுகிற நூலை எழுதியவருமான எம்.ஆர். நாராயணசாமி, தனது ‘இலங்கையின் புலிகள்’ (Tigers of Lanka)என்ற நூலில் - அவரே, இந்த உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார். விடுதலைப் புலிகள் என்ற அமைப்பு மட்டும் உளவு நிறுவனத்தின் பிடிக்குள் சிக்குவதற்கு தயாராக இல்லை. நாட்டின் விடுதலையில் மட்டுமே அவர்கள் உறுதியாக இருந்தார்கள். அதுதான் அவர்களின் “குற்றம்”; ஆனால் ஈழத்தில் தொடங்கிய தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தின் வழியாக இலங்கை அரசுக்கு நெருக்கடி தந்து, இந்தியாவின் கட்டுப்பாட்டுக்குள் ஈழப் போராளிகளைக் கொண்டு வருவதுதான் இந்தியாவின் திட்டம். அதை செயல்படுத்துவதே உளவு நிறுவனங்களின் வேலை. 

முதலில் ‘டெலோ’ என்ற அமைப்பை உளவு நிறுவனம் தனது ‘கைப்பாவை’யாக்கியது. அந்த அமைப்பு செயலிழந்தவுடன் ஈ.பி.ஆர்.எல்.எப். என்ற அமைப்பை தங்களது பிடிக்குள் கொண்டு வந்தார்கள். பிறகு பல்வேறு போராளிகள் குழுக்களில் ஏற்பட்ட பிளவுகளைப் பயன்படுத்தி விலகி வந்தவர்களை எல்லாம் இணைத்து ‘ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி’ (ஈ.என்.டி.எல்.எப்.) என்ற அமைப்பை உளவு நிறுவனம் உருவாக்கியது. இந்திய உளவுத் துறைக்கு ஆதரவாக ‘இந்து’ பார்ப்பன நாளேட்டில் எழுதி வந்த டி.பி.எஸ். ஜெயராஜ் போன்ற பத்திரிகையாளர்களே, இந்த உண்மைகளை ஒப்புக் கொண்டு எழுதியிருக்கிறார்கள். உளவுத் துறை உருவாக்கிய, இந்த குழுக்களை விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிராகவும், தேவைப்படும்போது இலங்கை ஆட்சிக்கு எதிராகவும் உளவு நிறுவனங்கள் பயன்படுத்தி வந்தன. 

கடைசியாக உளவு நிறுவனம் தனது ஏவல் படையாக பிடித்து வைத்த ‘ஈ.என்.டி.எல்.எப்.’ அமைப்புக்கு தலைவராக சென்னையில் கொலை, கடத்தல் வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு, 1989 ஆம் ஆண்டில் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்ட டக்ளஸ் தேவானந்தாவை தனது கைப்பிடிக்குள் உளவுத் துறையினர் கொண்டு வந்தனர். தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையிலிருந்தவரை விடுதுலை செய்து வெளியே கொண்டு வர முயற்சித்தவர்களே, ‘ரா’ உளவுத் துறையினர் தான். பிறகு உளவுத் துறையினரே, இந்திய ராணுவ விமானத்தை ஏற்பாடு செய்து, டக்ளஸ் தேவானந்தாவை - அந்த ராணுவ விமானத்தில் ஏற்றி யாழ்ப்பாணம் கொண்டு போய் துரோகம் - குழி பறிப்பு வேலைகளுக்காக இறக்கி விட்டார்கள். இந்த உண்மையை ‘டெகல்கா வார’ ஏடு (ஜூலை 1, 2006) வெளிக்கொண்டு வந்தது. 

ராஜீவ் காந்தி - ஜெயவர்த்தனாவுடன் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டுக் கொண்டு, அதை தமிழர்கள் மீது ஆயுத முனையில் திணித்தார். இந்தியாவின் ‘கைப்பாவைக் குழுக்கள்’ கண்களை மூடிக் கொண்டு ஒப்பந்தத்தை ஆதரித்தன. உண்மையான விடுதலைப் போராட்டத்தை நடத்திய விடுதலைப் புலிகள் மட்டும் ஏற்க மறுத்தனர். ஆனாலும் இந்திய அதிகார வர்க்கம், விடுதலைப் புலிகள் இயக்கத்தை மிரட்டி பணிய வைத்தனர். ‘இந்தியாவை பகைத்துக் கொள்ள விரும்பவில்லை; தமிழ் மக்களை இந்தியா பாதுகாக்கும் என்று நம்பி, ஆயுதங்களை ஒப்படைக் கிறோம்’ என்று, விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்தனர். விடுதலைபுலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் சில போட்டிக் குழுக்களுக்கு உளவுத் துறை ஆயுதங்களை வழங்கி வந்தது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், இதை வீடியோ படங்களுடன் ஆதாரத்தோடு அமைதிப் படை தளபதி ஹர்கிரத் சிங்கிடம் எடுத்துக் கூறினார்.  ஹர்கிரத் சிங்கும் உண்மையே என்று ஒப்புக் கொண்டார். இப்படி செய்வது தவறு, என்று இந்திய ராணுவத் தளபதியாக இருந்த கே.சுந்தர்ஜியிடம் சிங் புகார் கூறினார். சுந்தர்ஜியோ, ‘இது உயர்மட்டத்தின் முடிவு’ என்ற கூறிவிட்டார். இவையெல்லாம் ஹர்கிரத்சிங்கே வெளிப்படுத்திய உண்மைகள், மறுக்க முடியாது. அப்போதெல்லாம் ஹர்கிரத் சிங்கை பிரபாகரன் நேரில் சந்தித்துப் பேசி வந்தார்.

 ஒரு கட்டத்தில் நேரில் பேசுவதற்கு பிரபாகரன் வரும்போது பிரபாகரனை சுட்டுவிடுமாறு ராஜிவின் ஆலோசனைக் குழு இலங்கைத் தூதுவரக இருந்த ஜெ.என்.தீட்சத் வழியாக உத்தரவிட்டது. ஆனால், நேர்மையான அதிகாரியாக இருந்த ஹர்கிரத்சிங் இந்த படுபாதகத்தை தன்னால் செய்ய முடியாது என்று மறுத்துவிட்டார். பிரபாகரன் தலைமையிலான விடுதலைப்புலிகள் என்ற அமைப்பை, அதன் போராட்டத்தைத் தொடரவிட்டால், அவர்கள் தமிழ் ஈழப் போராட்டத்தை விரைவுபடுத்தி விடுவார்கள் என்பதோடு, இந்தியாவின் ஏவல் படையாக எந்த காலத்திலும் மாறமாட்டார்கள் என்பதை உறுதியாக புரிந்து கொண்ட இராஜீவ் காந்தியும், அவரது ஆலோசனை குழுவும், உளவு நிறுவனமும், விடுதலைப்புலிகளின் தலைமையை தீர்த்துக் கட்டுவதற்கு திட்டங்கள் தீட்டின. விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்தே ஆட்களைப் பிடித்தார்கள்.  பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக செயல்பட்ட மாத்தையா அந்த சதிவலையில் வீழ்ந்தார். விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து கொண்டே இந்திய உளவு நிறுவனத்துக்காக ரகசியமாக செயல்பட்டு வந்தார். இதையெல்லாம் ஏன் கூறுகிறேன் என்றால், இந்தப் பின்னணியில்தான் ஈழத்தில் நடந்த ஒவ்வொரு செயல்பாடுகளையும் பார்க்க வேண்டும். ராஜீவ் சர்மாவின் இந்த நூல்  உளவு நிறுவனங்களின் இந்த சதியை சூழ்ச்சிகளைப் பற்றி எதையும் குறிப்பிடவில்லை. ஆனால் விடுதலைப் புலிகள் மீது இந்த சதிகார நிறுவனங்கள் தமிழினப் பகைவர்கள் சுமத்திய களங்கத்தையும், வீண் பழிகளையும் அப்படியே நியாயப்படுத்துகிறது. 

ஒரு உதாரணத்தை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ராஜீவ் மரணத்தைத் தொடர்ந்து விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவரான கிட்டு வந்த கப்பல் ஒன்றை இந்திய கப்பல் படைவழி மறித்தது. இந்த நிகழ்வை இந்த நூல் உண்மைக்கு மாறான பொய்யான தகவல்களை தந்து நியாயப்படுத்துகிறது. ராஜீவ் கொலையை நடத்தி முடித்ததற்காகவே அதன் ‘வெகுமதியாக’ விடுதலைப் புலிகள் நவீன ஆயுதங்களையும், நவீன கப்பல்களையும் வெளிநாட்டு சக்திகளிடமிருந்து பெறத் தொடங்கினர் என்று இந்த நூல் குற்றம் சாட்டுகிறது. அப்படி ராஜீவ் கொலைக்காக கிடைத்த நவீன ஆயுதங்களை வெளிநாட்டு சக்திகளிடமிருந்து பெற்று கப்பலில் கொண்டு வரும்போது தான் கிட்டு பிடிபட்டார் என்று அபாண்டமாக பழி சுமத்துகிறது, இந்த நூல். உளவுத் துறையின் அவதூறுகளையும், பழியையும் நியாயப்படுத்துவதற்காக திட்டமிட்டு உண்மைகளையே மறைத்து எழுதியிருக்கிறார் நூலாசிரியர். 

“1993 ஜனவரி 13 ஆம் தேதி சென்னை துறைமுகத்திலிருந்து 700 கி.மீட்டர் தொலைவில் இக்கப்பல் இடைமறிக்கப்பட்டது” என்கிறார் நூலாசிரியர். இந்திய எல்லைக்கு அப்பால் சர்வதேச கடல் பகுதியில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு கப்பலை, இந்திய கப்பல் படை சட்ட விரோதமாக சென்று வழி மறித்ததை இந்த நூல் குறிப்பிடாமல், அப்படியே மூடிமறைக்க விரும்புகிறது. ‘700 மைலுக்கு அப்பால் சென்ற கப்பல்’ என்ற வார்த்தையோடு நிறுத்தி விடுகிறார்கள். சர்வதேச கடற்பரப்பில் கப்பலை மடக்கி, இந்திய கடல் எல்லைக்குள் கொண்டு வரப்பட்ட உண்மையை மறைத்துவிட்டு, சென்னை துறைமுகத்திலிருந்து 10 கி.மீ. தொலைவில் இருக்கும்போது, அதாவது இந்திய கடற்பரப்பில் இருக்கும்போது அக்கப்பல் கிட்டுவால் வெடிக்கச் செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டுகிறார்கள். 

உண்மையில் என்ன நடந்தது? கிட்டுவின் கப்பல் - சர்வதேச கடல்பரப்பில் 440 கடல் மைலுக்கு அப்பால் வந்து கொண்டிருந்தபோது, உளவுத் துறைக்கு மாத்தையா வழியாக அத்தகவல் கிடைக்கப் பெற்றது. கப்பலை வழி மறிக்க இந்திய கப்பல் படை சென்றது. கப்பலை இந்திய கடல் எல்லைக்குள் கொண்டு வருமாறு கப்பல் படையினர் மிரட்டினர். அதற்கு கிட்டு ஒத்துழைக்காத நிலையில், அதிரடிப் படையினர் ஹெலிகாப்டர் துணையுடன் கப்பலுக்குள் குதித்தனர். அப்போது கிட்டுவும், உடன் வந்த போராளிகளும் தங்களைத் தாங்களே அழித்துக் கொண்டு வீரச் சாவைத் தழுவினர். 

கிட்டு என்ற மாவீரன் தனது இரு கால்களையும் இழந்த பிறகும் உள்ள உறுதியோடு விடுதலைக்காக களத்தில் நின்ற போராளி. இந்தியாவின் துரோகத்தினால் தன்னைத் தானே தீயிட்டுக் கொண்டு, வீரமரணத்தை தழுவினார். 

கப்பலில் உயிருடன் பிடிபட்ட 9 போராளிகள் மீது இந்திய அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நடந்தது. சம்பவம் நடந்த இடம் ஆந்திர மாநிலத்துக்கு உட்பட்டது. இந்திய கப்பல் படை சர்வதேச பரப்பில் அத்துமீறி நுழைந்து, மேற்கொண்ட இந்த நடவடிக்கை சட்ட விரோதமானது என்று அறிவித்த ஆந்திர உயர்நீதிமன்றம், 9 புலிகளையும் விடுதலை செய்தது மட்டுமல்ல, கப்பல் புறப்பட்ட இடமான மத்திய அமெரிக்காவுக்கு அவர்களை அரசாங்கமே சொந்த செலவில் திருப்பி அனுப்ப வேண்டும் என்று கன்னத்தில் அறைந்ததுபோல் தீர்ப்பளித்தது. ஈழ விடுதலையில் இந்தியாவின் சதிக்கும், கீழறுப்பு நடவடிக்கைகளுக்கும், இந்திய நீதிமன்றமே தந்த செருப்படிதான் இந்த தீர்ப்பு.

இந்த உண்மைகளை எல்லாம் மறைத்துவிட்ட இந்த நூல், இந்த வழக்கு தமிழ்நாடு நீதிமன்றத்தில் நடந்ததாக ஒரு பொய்யான தகவலைத் தருவதோடு, இந்த விசாரணைக்காக அரசு 10 கோடி ரூபாய்க்கு மேல் செலவிட்டும் பலன் கிடைக்காமல் போய் விட்டதே என்று கவலைப்பட்டு வருந்துகிறது. 

இந்தக் கப்பல் பிடிபட்டதற்கு, புலிகள் இயக்கத்திற்குள்ளே நடந்த துரோகம் பற்றி இந்த நூல் மவுனம் சாதிக்கிறது. பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரிய தளபதியாக செயல்பட்ட மாத்தையா தான் இந்த கப்பல் வரும் சேதியை ‘ரா’ உளவு நிறுவனத்துக்கு தந்தார். ஆதாரங்களோடுதான் கூறுகிறோம்.

- தொடரும்