Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
Keetru DYFI Ilaingar Muzhakkam
DYFI logoDYFI Ilaingar Muzhakkam
நவம்பர் 2007

பகத்சிங் கனவு கண்ட சோசலிச இந்தியாவை உருவாக்குவோம்:
சீத்தாராம் யெச்சூரி

பகத்சிங் கனவு கண்ட சோசலிச இந்தியாவைக் கட்டும் மகத்தானப் பொறுப்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்களின் கடமை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி கூறினார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமும் தியாகி பகத்சிங் நினைவு இளைஞர் அறக்கட்டளையும் இணைந்து பகத்சிங் நூறாவது பிறந்த நாள் நிறைவுக் கொண்டாட்டத்தை 2007 செப்டம்பர் 27 வியாழன் அன்று தலைநகர் டில்லியில் மாண்டி ஹவுஸ் அருகில் உள்ள சிறிய தியேட்டர் குழு அரங்கத்தில் நடத்தியது.

‘‘நம் விடுதலைப் போராட்டத்தின் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாரம்பர்யத்தை உயர்த்திப் பிடிப்போம்’’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர் ஸ்ரீராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். சங்கத்தின் பொருளாளர் புஷ்பேந்திர தியாகி வரவேற்புரையாற்றினார். கியூபா தூதர் மிகயீல் ஏஞ்சல் ரெமரிஷ், இந்திய ஜனநாய வாலிபர் சங்க நிறுவனத் தலைவர் ஹன்னன் முல்லா, பேரா.பல்வந்த்சிங் ஆகியோர் உரையாற்றியபின் சீத்தாராம் யெச்சூரி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

பகத்சிங் வாழ்க்கை மற்றும் செயல்பாடுகள் நம் ஒவ்வொருவருக்கும் உத்வேகம் அளித்துக் கொண்டிருக்கிறது. பகத்சிங் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை எந்தச் சூழ்நிலையில் நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்? புதிய இந்தியா விழித்தெழுந்து கொண்டிருக்கிறது. புதியவிதமான இளைஞர்கள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த காலத்தில் வீரர்களிடமிருந்து, கடந்த கால பிரச்சனைகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு, எதிர்கால இந்தியாவை அமைக்கும் பணியில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும். கடந்த காலங்களில் நம் முன்னோர்கள் செய்திட்ட வீரம் செறிந்த போராட்டங்களை, சுதந்திரம் பெறுவதற்காக செய்திட்ட தியாகங்களை, நாம் தெரிந்துகொள்ளவில்லை என்றால், அல்லது தெரிந்ததை மறந்துவிட்டோம் என்றால், எதிர்கால போராட்ட வடிவங்களை நாம் உருவாக்கிட முடியாது.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உறுப்பினர் எண்ணிக்கையில், இந்தியாவிலேயே முதலாவது அமைப்பு என்றும் உலக அளவில் இரண்டாவது இடத்தை வகிக்கிறது என்று நாம் பெருமிதம் கொள்ளும் அதேசமயத்தில், எவ்வித அமைப்புகளுக்குள்ளேயும் வராத இளைஞர்கள்தான் பெரும்பகுதி என்பதை விமர்சனரீதியாக கணக்கில் எடுத்துக் கொண்டு அவர்களையும் அமைப்பிற்குள் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் நாட்டின் முகத்தோற்றத்தை மாற்றியமைக்கும் பணியை நம்மால் வெற்றிகரமாகச் செய்திட முடியும். அதுமட்டுமல்ல, நாட்டு மக்களில் இன்று பெரும்பகுதியாக இருப்பது இளைஞர்களே. சுமார் 70 கோடி இளைஞர்கள் இன்றைய தினம் நாட்டில் இருக்கிறார்கள். இந்த இளைஞர்களை அணிதிரட்டாமல், நாட்டில் ஒரு மாற்றத்தை சோசலிச மாற்றதைக் கொண்டுவருவது என்பது சாத்தியமில்லை.

ஏகாதிபத்தியம் ஒழிக, புரட்சி ஓங்குக என்று முழக்கமிட்டான் பகத்சிங். ஆனால் இன்றைய தினம் ஆட்சியாளர்கள் ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளாக மாற முயல்வதை இந்திய அமெரிக்க அணுசக்தி பேரத்திலிருந்து நாம் காண முடிகிறது. இதற்கு நாட்டில் பல்வேறு ஊடகங்கள் சேவகம் செய்வதையும் காண முடிகிறது. இதனையெல்லாம் இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டுமென்றால், பகத்சிங் மேற்கொண்டதைப்போல் தத்துவார்த்தப் போராட்டத்தை மேலும் இரட்டிப்பு வேகத்தில் நாம் செய்தாக வேண்டும்.

அனைவருக்கும் வேலை, அனைவருக்கும் கல்வி என்கிற முழக்கத்தை வைத்திருக்கிற நாம், இன்றைய இந்திய அமெரிக்க அணுசக்தி பேரம் எந்த விதத்தில் எல்லாம் நம் வேலைகளைப் பறிக்க இருக்கிறது என்பதையும் மற்றும் அதன் எதிர்மறை அம்சங்களையும் இந்திய இளைஞர்கள் அனைவரின் மத்தியிலும் நாம் கொண்டு சென்றாக வேண்டும்.

உலகமயக் காலகட்டத்தில் ஏகாதிபத்தியம் நம் நாட்டின் கொள்கைகளில் எல்லாம் எந்த விதத்தில் தலையிட்டு, ஏற்றத் தாழ்வுகளை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதை இளைஞர்கள் மத்தியில் வாலிபர் சங்கம் கொண்டு செல்ல வேண்டும். உலக மயக் கொள்கைகள் ஒளிர்கிற இந்தியாவுக்கும் அல்லலுறுகிற இந்தியாவுக்கும் இடையில் உள்ள இடைவெளியை அதிகப்படுத்திக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக நாட்டின் இளைஞர்களில் பெரும்பகுதி, அன்றாட வாழ்க்கைக்கே மிகவும் அவதிப்படக்கூடிய நிலை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

பகத்சிங் நாட்டின் சுதந்திரத்திற்காகவும், காலனியாதிக்க நுகத்தடியிலிருந்து விடுதலை பெறுவதற்காகவும், ஏகாதிபத்தியத்திற்கெதிராகவும் போராடினான். பகத்சிங் அவ்வாறு நாட்டு விடுதலைக்காகப் போராடினாலும், அவனது இறுதி லட்சியம் சோசலிச இந்தியாவை அமைப்பதுதான்.

நீதிமன்றத்தில், ‘ஏகாதிபத்தியம் ஒழிக’ ‘புரட்சி ஓங்குக’ என்று முழக்கமிடுகிறீர்களே, அதற்கு என்ன பொருள் என்று நீதிபதி கேட்டபோது, பகத்சிங் எழுத்துபூர்வமாகக் கொடுத்த பதில் என்ன?

‘புரட்சி என்பதன் மூலம் வெளிப்படையான அநீதியை அடிப்படையாகக் கொண்ட இந்த சமூக அமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். இந்த நாட்டில் அடிப்படையான மாற்றம் தேவைப்படுகிறது. இதனை உணர்ந்தவர்களின் கடமை சமுதாயத்தை சோசலிசத்தின் அடிப்படையில் புதிதாக மாற்றியமைக்க வேண்டியதே ஆகும். இது செய்யப்படவில்லை என்றால், மனிதனை மனிதன், ஒரு நாட்டை இன்னொரு நாடு சுரண்டுவதற்கு முற்றுப்புள்ளி வைக்காவிடில், மனிதகுலம் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் துன்ப துயரங்களிலிருந்து, விடுதலை பெற முடியாது.

புரட்சி என்பதன் மூலம் இவ்விதம் நிலைகுலையக்கூடிய அபாயம் இல்லாததும், பாட்டாளி வர்க்கத்தின் தலைமைப்பாத்திரம் அங்கீகரிக்கப்பட்டிருப்பதுமான ஒரு சமூக அமைப்பை, முதலாளித்துவத்தின் அடிமைத்தளையிலிருந்தும், ஏகாதிபத்தியப் போர்களின் கொடுமைகளிலிருந்தும், மனிதகுலத்தை விடுவிக்கவல்ல உலகக் கூட்டரசு ஒன்றை இறுதியாக ஏற்படுத்துவதையே நாங்கள் அர்த்தப்படுத்துகின்றோம்.

இதுவே எங்கள் கொள்கை. இந்தக் கொள்கையினால் உத்வேகம் பெற்றே நாங்கள் இச்சரியான, உரத்த எச்சரிக்கையை விடுத்துள்ளோம்.

இவ்வாறு பகத்சிங் கொள்கை என்பது, நாட்டின் சுதத்திரத்திற்கு அப்பாற்பட்டு ஓர் உன்னத சோசலிச அமைப்பை உருவாக்குவதாகத்தான் இருந்தது.

இன்று நம் நாட்டின் நிலைமை என்ன? இந்தியா பல்வேறு முனைகளில் முன்னேறியிருக்கிறது என்பதில் ஐயமில்லை. தகவல் தொழில்நுட்பத்துறையில் அபரிமிதமான வளர்ச்சி. அமெரிக்காவில் உள்ள சிலிகான் வாலி என்கிற தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்திய இளைஞர்களே ஏராளமாக இருக்கிறார்கள் என்பது ஒருபுறம் உள்ள உண்மைதான். சுமார் 6 லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் வேலை செய்கிறார்கள். என்றாலும், இங்கே நம் நாட்டிலேயே கோடிக்கணக்கான இளைஞர்கள் இன்னமும் வேலையின்றி திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே மறுபுறம் உள்ள கசப்பான உண்மை. உலகமயம் என்ற பெயரில் இந்தியா உட்பட வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதாரத்தை மறுகாலனியாதிக்கம் செய்திடுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆட்சியாளர்கள் ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகளாக மாறிக்கொண்டிருக்கிறார்கள்.

இத்தகு சூழலில்தான் உங்கள் கடமையை நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டும். பகத்சிங் விட்டுச் சென்ற பணியை, தொடர்ந்து எடுத்துச் செல்லக்கூடிய மாபெரும் பொறுப்பு நம் தோளில்தான் விழுந்திருக்கிறது. இதனை வேறெவராலும் செய்திடவும் முடியாது. நம்மால்தான் இதனைச் செய்திட முடியும். ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிகளை முறியடித்திடாமல், உங்கள் போராட்டங்களை நீங்கள் முன்னெடுத்துச் செல்ல முடியாது.

இந்தியாவில் ஒரு சுயசார்பு பொருளாதார அடித்தளத்தில் நின்று, ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிகளை முறியடித்து, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல பகத்சிங் வழிவந்த உங்களால்தான் முடியும். பகத்சிங் தொடங்கி வைத்த வேலையை முடிக்கும் பணி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இன்றைய சந்ததியையே சாரும்.

பகத்சிங் பிறந்து நூறு ஆண்டுகளாகிறது. பகத்சிங்கிற்கு இன்றைக்கு வாரிசுகள் இருப்பதுபோல் அவன் உயிரோடிருந்த காலத்திலேயே ஏராளமானோர் அவனைப் பின்பற்றத் தொடங்கிவிட்டனர். பகத்சிங் தூக்கிலிடப்பட நிச்சயிக்கப்பட்ட நாள் மார்ச் 24. பொதுவாக தூக்கிலிடப்படும் நேரம் அதிகாலைதான். ஆனால் பகத்சிங்கைப் பார்ப்பதற்காக பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் சிறைச்சாலையை நோக்கி வரத் தொடங்கியதால், ஆங்கிலேயே அரசு ஒரு நாள் முன்னதாகவே மார்ச் 23 அன்று இரவு நேரத்தில் பகத்சிங்கைத் தூக்கிலிட்டது. சடலத்தையும் அப்புறப்படுத்திவிட்டது.

ஆனாலும் பகத்சிங் விட்டுச் சென்ற பாரம்பர்யத்திற்கு நாட்டில் லட்சோபலட்சம் இளைஞர்கள் வாரிசுகளாகிவிட்டார்கள். அவர் வழிநின்று நாட்டில் ஒரு சக்திமிக்க இயக்கத்தைக் கட்டுவோம். இல்லையேல், ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டு வரும் ‘‘ஒளிர்கிற இந்தியனுக்கும்’’ ‘‘அல்லலுறுகிற இந்தியனுக்கும்’ இடையே அதிகரித்துவரும் இடைவெளியை நம்மால் நிரப்பிட முடியாது.

எனவே, பகத்சிங் உயர்த்திப்பிடித்த கொள்கை வழிநின்று, சமூகத்தை மாற்றியமைத்து, சோசலிச இந்தியாவை உருவாக்கிட சபதமேற்போம். இதனையே இக்கருத்தரங்கு உங்களுக்கு விடுக்கும் செய்தியாகும். இதனை உங்கள் மனதில் கொண்டு, ஆட்சியாளர்களின் ஏகாதிபத்திய ஆதரவுக் கொள்கையை மாற்றியமைத்திட, முன்வாருங்கள்.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் சீனாவும்தான் உலகை ஆண்டன. அந்த நிலைமை மீண்டும் திரும்பிக் கொண்டிருக்கிறது. அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகை ஒரு துருவ உலகமாக மாற்ற முயற்சித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் சீனாவும் நாமும் இணைந்து இதனை ஜனநாயகபூர்வமான பல்துருவ உலகமாக மாற்றிடுவோம். இதுவே நான் உங்களுக்கு விடுக்கும் செய்தி. இத்தகைய மாபெரும் வரலாற்றுக் கடமை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத் தோழர்கள் தோள்களில் விழுந்திருக்கிறது. இதனை உங்களால் செய்ய முடியும் என்கிற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு.

இவ்வாறு சீத்தாராம் யெச்சூரி கூறினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் இணைச் செயலாளர் அபாஷ் ராய் சவுத்ரி நன்றிகூறினார். பின்னர் அரங்கத்தில் பஞ்சாப் கலா கேந்திராவின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. தமிழகத்திலிருந்து எஸ்.ஜி.ரமேஷ்பாபு, குணசுந்தரி, தண்டபாணி உட்பட 25க்கும் மேற்பட்ட தோழர்கள் பங்கேற்றார்கள்.



நண்பருக்கு இப்பக்கத்தைப் பரிந்துரைக்க...

படைப்பாளிகளின் கவனத்திற்கு...

கீற்று இணையதளத்திற்கு தங்களது படைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]. வேறு எந்த இணைய தளத்திலோ, வலைப்பூக்களிலோ வெளிவராத படைப்புகளை மட்டுமே கீற்றிற்கு அனுப்பவும். அப்படியான படைப்புகள் மட்டுமே கீற்றில் வெளியிடப்படும்.


Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com